Friday, 25 August 2017

தினகரன் அணிக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவு!

விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ கலைச்செல்வன் தினகரனைச் சந்தித்து தனது ஆதரவை தெவித்துள்ளார்.
அ.தி.மு.க-வில் பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி இணைந்ததைத் தொடர்ந்து மீண்டும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கவர்னரைச் சந்தித்து முதல்வர் எடப்பாடிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.

குறிப்பாக, முதல்வர் பழனிசாமி பதவியை விட்டு விலகவேண்டும் என்று வலியுறுத்தும் தினகரன் தரப்பினர், சபாநாயகர் தனபாலை முதல்வர் ஆக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்து வருகின்றனர். கவர்னரைச் சந்தித்து கடிதம் அளித்தபோதே, தினகரன் அணிக்கு 19 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி தினகரனை நேற்று நேரடியாக சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தார். இதனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில், விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ கலைச்செல்வன், அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் அவரைச் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதன் மூலம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

0 comments: