முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அணியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இணைந்தது தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். இதனால் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப்பெறுகிறேம்' என்று கூறி சில நாள்களுக்கு முன்னர் ஆளுநரை நேரில் சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து தமிழக எதிர்க்கட்சியான தி.மு.க, 'எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையை இழந்து விட்டது. எனவே, சட்டப்பேரவையைக் கூட்டி உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்று ஆளுநருக்கு கடிதம் அனுப்பியது.
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 'சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க பொறுப்பு ஆளுநர் உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் சட்டவிரோத அமைச்சரவை நீடிக்க அவர் இடமளித்துவிடக் கூடாது. ஜனநாயகப் படுகொலை நடைபெற ஆளுநர் இடமளித்து விடவே கூடாது. இந்த ஆட்சியை விட்டுவைக்கக்கூடாது என்பதையே திமுக விரும்புகிறது. பெரும்பான்மையை இழந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சி அவை உரிமை குழுவை கூட்டுவது தவறு. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் சட்டப்பேரவை உரிமைக் குழுவை கூட்டி உள்ளனர். சென்னையை சுற்றி குட்கா விற்பனை நடப்பது உண்மைதான்' என்று காட்டமாக கூறினார்.

0 comments: