மதுரை: தமிழகத்தின் தற்போதைய சூழலைப் பொறுத்தவரை, ஆளுநரே நீதிபதியாக செயல்பட வேண்டியுள்ளது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் மறைந்ததை அடுத்து, தமிழக அரசியலில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. ஆளும் அதிமுகவிற்குள் உட்கட்சி பூசல் நீடித்து வருகிறது.
இதற்குள் அணிகள் இரண்டாகி, மூன்றாகி மீண்டும் இரண்டாகி உள்ளது. ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இணைந்த பின்னர், டிடிவி தினகரன் தலைமையிலான அணியினர் புதுச்சேரியில் தங்கி தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ஆளுநரிடம் தமிழக முதலமைச்சரை நீக்க வலியுறுத்திய அவர்கள், தங்கள் அணி மேலும் பலப்படும் என்று கூறுகின்றனர். இதனால் தமிழகத்தை ஆளும் கட்சி நீடிக்குமா? அல்லது கவிழுமா? என்று கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கிடையில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரிய எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஆளுநர் நிராகரித்து விட்டார். இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்,
மக்களின் அரசாங்கத்திற்கு நான் எதிரானவள் இல்லை என்றார். ஒரு ஆளுநருக்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோ, அதற்கு உட்பட்டே செயல்படுகிறேன். சட்ட விதிகளை மீறியதில்லை.
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில், ஆளுநர் எடுக்க வேண்டிய முடிவு குறித்து, நான் எதுவும் கருத்து கூற முடியாது. சவாலான சூழல் இது.
தற்போதைய சூழலுக்கு ஏற்ப, சரியான முடிவை, தமிழக ஆளுநர் எடுப்பார். அவர் தான், சரியான நீதிபதியாக இருக்க முடியும் என்று கிரண்பேடி கூறினார்.
0 comments: