Wednesday, 6 September 2017

ஜெயலலிதா நினைவிடத்தில் திடீர் போராட்டம்… போலீஸ் அசந்த நேரத்தில் உள்ளே நுழைந்த மாணவர்கள்.!!!

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டியும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் 50 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள், திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்..

நீட் தேர்வின் அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, மனமுடைந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் கொதித்தெழுந்த மாணவ –மாணவிகள் தமிழகம் முழுவதும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர்கள் கூடுவார்கள் என எதிர்பார்த்த போலீசார், மெரீனா கடற் கரையில் பொதுமக்கள் உட்பட யாரையும் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் 50 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று திடீரென தியானத்தில் ஈடுபட்டனர்.

இதனை சிறிதும் எதிர்பார்க்காத போலீஸ், மாணவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்பொழுது, ஓபிஎஸ்க்கு தியானம் செய்ய அனுமதி அளித்த காவல் துறையினர் தங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் மாணவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றி கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் கிண்டி சாலையில் நந்தனம் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் பல இடங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மாணவர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

0 comments: