Friday, 25 August 2017

29-ந்தேதி நடைபெற இருந்த முழு அடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

மயிலாடுதுறை, 

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வருகிற 29-ந்தேதி நடைபெறுவதாக இருந்த முழு அடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு நேற்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வந்தார். அவரை அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் விவசாய சங்க பொறுப்பாளர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தன.

பின்னர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது. இங்கு விவசாய சங்க பொறுப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதில் பெறப்பட்ட கருத்துக்களை அறிக்கையாக தயார் செய்து மத்திய விவசாய துறை மற்றும் பெட்ரோலிய துறைக்கு அனுப்பி வைப்பேன்.

மேலும், விவசாய சங்க பொறுப்பாளர்கள், சம்பந்தப்பட்ட 2 மத்திய மந்திரிகளையும் சந்திக்க அனுமதி பெற்று தருகிறேன். இதனால் முழு அடைப்பு போராட்டம் வேண்டாம் என்று அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கையின் மூலம் நல்ல தீர்வு காணப்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார். இதனை ஏற்று வருகிற 29-ந்தேதி நடைபெற இருந்த முழு அடைப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக மத்திய அரசு அறிவிக்கும் என்று நம்புகிறோம்.

0 comments: