Thursday, 31 August 2017

அமெரிக்கா:டெக்சாஸ் மாகாணத்தில் ரசாயன ஆலைக்குள் வெள்ளம் புகுந்ததால் வெடிக்கும் அபாயம்

டெக்சாஸ் மாகாணத்தில் காரஸ்பை என்ற இடத்தில் உள்ள ரசாயன ஆலையில் வெள்ளம் புகுந்து உள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை கடந்த 26–ந் தேதி ‘ஹார்வே’ என்கிற பயங்கர புயல் தாக்கியது.

மணிக்கு 215 கி.மீ. வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் ஹூஸ்டன் நகரம் சின்னாபின்னமாகிவிட்டது. இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால் அந்நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

இந்த நிலையில் அங்கு தொடர்ந்து புயல் காற்று வீசுவதோடு, கனமழையும் கொட்டி வருகிறது. புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிர் இழந்தோரின் எண்ணிக்கை இருபதை தொட்டுவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் ஹூஸ்டன் நகரில் பணியில் ஈடுபட்டிருந்த 60 வயதான போலீஸ் அதிகாரி ஒருவர் வெள்ளத்தில் மூழ்கி உயிர் இழந்தார்.

புயல் பாதித்த பகுதிகளில் 1000–க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாவலர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே டெக்சாஸ் மாகாணத்தில் காரஸ்பை என்ற இடத்தில் உள்ள ரசாயன ஆலையில் வெள்ளம் புகுந்து உள்ளது. இதனால் அங்கு எந்த நேரத்திலும் வெடிப்பு நிகழும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே ஆலையை சுற்றி சுமார் 3 கி.மீ. தூரத்தில் வசித்துவரும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

மற்றொருபுறம் ஹூஸ்டன் நகரில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் போலீசார் போல வேடம் அணிந்து பொதுமக்களிடம் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக அந்த நகரில் இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

0 comments: