இலங்கை;
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மக்கள் குடியிருப்புப் பிரதேசங்களில் நேற்றிரவு யானைகள் புகுந்ததாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
வடமராட்சி கிழக்கு ஆழியவளை மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய கிராமங்களிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்று நள்ளிரவு வேளையில் ஆழியவளை மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய இடங்களில் காட்டு யானைகளின் நடமாட்டத்தினை மக்கள் கண்ணுற்றுள்ளனர்.
இதனால் பெரும் அச்சத்துக்குள்ளான மக்கள் வனவள பாதுகாப்புப் பிரிவினர்க்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் யானைகளை விரட்டும் நோக்கில் நெருப்பு மூட்டி அதிகாலை வரை காவல் காத்துள்ளனர். அதிகாலை வேளையில் குறிப்பிட்ட யானைகள் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் இதனால் இரவு முழுவதும் அச்சத்துடன் கழித்ததாகவும் பிரதேசத்தைச் செர்ந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கின் தெற்கு எல்லையில் சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளமை தெரிந்ததே.
அதற்கு அண்மைய கிராமங்களே வெற்றிலைக்கேணி மற்றும் ஆழியவளை என்பனவாகும்.
இந்தப் பிரதேசங்கள் வன்னிப் பெருங்காட்டுடன் இணையும் கண்டல் காடுகளை உள்ளடக்கிய பிரதேசங்களாகும்.
யானைகளின் நடமாட்டம் இந்தப்பிரதேசங்களில் இருப்பது மிக அரிதான ஒரு சம்பவமாக இருந்தாலும் அண்மைய காலங்களில் இலங்கையின் பெருங்காடுகளிலிருந்து கரையோரப்பகுதிகளுக்கு யானைகள் நகர்ந்துவருகின்றமை இங்கே சுட்டிக்காட்டத்தக்க ஒன்றாகும்!
0 comments: