கல்கமுவ - கிரிபாவ - சாலிய - அசோகபுர பிரதேசத்தில் 17 வயதான பாடசாலை மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 36 வயதான ஹர்சன சமன் குமாரவின் தாயாரான குசுமாவதி, இந்த குற்றத்தை செய்த தனது மகனை தூக்கிலிட்டு கொன்றாலும் தனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
கடிதம் ஒன்றின் ஊடாக அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டுள்ள மாணவியின் உடலுக்கு முன்னாள் இந்த கடிதத்தை வாசிக்குமாறு கோரி, கல்கமுவ உதவி காவற்துறை அத்தியட்சகருக்கு இந்த கடித்தை அந்த தாய் அனுப்பியுள்ளார்.
இத்தகைய ஒரு குற்றவாளியின் தாயாக இருப்பதால் ஏற்பட்டுள்ள மனவேதனையை தாங்கிகொள்ள முடியவில்லை என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன் கொலை செய்யப்பட்டுள்ள மாணவியின் ஆத்மா சாந்தியடைய தான் பிரார்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த குற்றத்தை செய்த தன் மகனை தூக்கிலிட்டு கொன்றாலும் தனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு இவ்வாறு கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த மாணவியின் தாய் முறுக்கு உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் அயல் வீடொன்றில் தொழில் புரிவதாக தெரிவிக்கப்படுகிறது.
வழமை போல் , தொழிலுக்கு சென்று மதியம், வீட்டிற்கு திரும்பிய தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு அவரின் மகள் கைகள் கட்டப்பட்ட நிலையில் ,கட்டிலில் விழுந்து கிடந்தார்.
அதனை பார்த்து குறித்த பெண் கூச்சலிட்டதை தொடர்ந்து பிரதேசவாசிகள் கூடியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் , பிரதேசவாசிகளால் சந்தேகநபர் ஒருவர் பிடிக்கப்பட்டு காவற்துறையில் ஒப்படைத்துள்ளனர்.
அந்த சந்தேகநபர் ,போதைப் பொருள் மற்றும் குடிபோதையில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
அவர் , சிறுமியின் வீட்டின் அருகில் இருந்து பேரூந்தொன்றில் ஏறி தம்புத்தேகம நோக்கி சென்றுள்ளார்.
இதன் போது , குறித்த நபர் மீது சந்தேகித்த பேரூந்தின் நடத்துடனர் , குறித்த நபர் தொடர்பில் முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் சிலருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் , குறித்த பேரூந்தை பின் தொடர்ந்த முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் அவரை பிடித்து காவற்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
உயிரிழந்த மாணவி 2019ம் ஆண்டு உயர் தர பரீட்சைக்கு தோற்றவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments: