மத்தியில் இருப்பது மோடி ஆட்சி அல்ல என்றும் அது மோசடி ஆட்சி என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுகவின் முரசொலி பத்திரிகை பவள விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மு.க. ஸ்டாலின், கடந்த மாதம் 11 ஆம் தேதி நடைபெற்று இருக்க வேண்டிய இந்த பவள விழா, மழை வந்ததால் நிறுத்தப்பட்டதை சுட்டிக்காட்டினார். அப்போது நிறுத்தப்பட்டதால் தான் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார் எனவும் ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்தார்.
அதிமுக-வில் ஏற்பட்டுள்ள பிளவை பயன்படுத்தி தமிழகத்தில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று பாஜக முயல்வதாகக் கூறிய ஸ்டாலின், அவர்களின் இந்த முயற்சி ஒருபோதும் நிறைவேறாது என தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின், மத்தியில் இருப்பது மோடி ஆட்சி அல்ல மோசடி ஆட்சி என குற்றம் சாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய வைகோ, திமுக தலைவர் கருணாநிதி, முரசொலி பத்திரிகையை தமிழக அரசியல் மாற்றத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.
இதனையடுத்துப் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கீ. வீரமணி, முரசொலி பவள விழாவில் வைகோ கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். வைகோவும், நிகழ்ச்சிக்கு வந்த மற்ற தலைவர்களும் திமுகவுடனேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், தமிழகத்தில் இருப்பது ஊழல் ஆட்சி என்றும், கட்டப்பஞ்சாயத்து ஆட்சி என்றும் விமர்சித்தார். மாநிலப் பட்டியலில் இல்லாமல் பொதுப்பட்டியலில் கல்வி இருப்பதாலேயே அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்ட அவர், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
Welcome
ReplyDelete